Monday 10 September 2012

VILLIPUTHOOR MAHABHARATH STORY IN TAMIL

அருள்மிகு வைகுண்டநாதர் குருமகாபீடத்தின் வாயிலாக வில்லிபுத்தூராரின் வில்லிபாரதத்தை அடியேன் படித்துப் புரிந்து கொண்டவாறு சுருக்கிக் கொடுத்துள்ளேன்.  படித்துப் பயன்பெற விருப்பமுள்ளோர் பயன்பெறும்படி வேண்டுகிறேன்.

வில்லிபுத்தூராரின் மகாபாரதக் கதை

      பாண்டவர்களும் நூற்றுவரும் பிறந்த கதையைச் சொல்வதன் மூலம் நாம் பாரதக் கதையைத் துவக்கலாம்

      சந்தனு மகாராசா என்பவர் யார் அவர் கங்கையை ஏன் மணந்தார் போன்ற விடைகள் தெரிந்தால் தான் பாண்டவர்கள் நூற்றுவர் வந்த கதை நமக்குப் புரியும்

    ப்ரதீபன் என்ற அரசன் ஒருவன் இருந்தான்.  அவன் மனைவி சுகந்தி.  இவர்களுக்கு மூன்று புதல்வர்கள்.  அவர்கள் பெயர் தேவாபி, சந்தனு, பாலிகன்.
    முதல்வன் சிறுவயதிலேயே கானகம் சென்றுவிட்டான் தவம் புரிய.  அடுத்தவன் சந்தனு.  சந்தனு வயோதிகர்களைத் தொட்டால் அவர்கள் இளையவர்கள் ஆகிவிடுவார்கள்.  அப்படி ஒரு வரம் பெற்றிருந்தான்.  மூத்தவன் கானகத்துக்குப் போனதால் அடுத்தவன் - சந்தனு அரசன் ஆனான்.  அவன் நன்றாக் அரசோச்சினான்.
      ஒரு நாள் கங்கை என்னும் மங்கையை அவன் நதிக்கரையோரம் கண்டான்.  இவள் யாராயிருக்கலாம் என்று வியந்தான்.  அவ்வளவு அழகு அந்தப் பெண்.

வையகமடந்தைகொல்! வரைமடந்தைகொல்!
செய்ய பங்கயமலர்த் திருமடந்தைகொல்!
துய்ய வண் கலைவிதச் சொல்மடந்தைகொல்!
ஐயமுற்றனன்,

      பூமாதேவி, பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கான அழகான தமிழ்ப் பெயர்களைத் தந்திருக்கிறார் வில்லிபுத்தூரார்.  வையகமடந்தை, வரைமடந்தை, திருமடந்தை மற்றும் சொல்மடந்தை.  மலைமகள், அலைமகள் மற்றும் கலைமகள் என்று நாம் கூறுவோம்.  எப்படியோ நல்ல தமிழில் இறைவன் பெயரைக் கூறவேண்டும்.
      கங்கை ஏன் பெண்ணுரு கொண்டு வந்தாள்? என்று ஒரு துணைக்கதையைப் பார்ப்போம்.
    ஒருநாள் இந்திரனது சபையில் கங்கை வந்தாள்.  தன்னை விட யாருக்காவது பெண் சபலம் உள்ளதா என்பதைக் கண்டறிய இந்திரன் காற்றுக் கடவுளை அழைத்து கங்கை நுழைந்ததும் பலமான காற்று அடித்து அவளது மேலாடையை விலக்க வேண்டுமெனக் கட்டளையிட்டான்.  அதே மாதிரி நடந்தது.  திகைத்தாள் கங்கை.  சுற்றுமுற்றும் நோக்கினாள்.  எல்லோரும் கண்ணைப் பொத்தி தலைகுனிந்து அமர்ந்திருந்தனர்.
   வருணன் மட்டும் வைத்த கண் எடுக்காமல் கங்கையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவன் கடலுக்கு இறைவனாயிற்றே.  எப்படியும் கங்கை நதி என்னிடம் வந்து தானே தீரவேண்டும் என்னும் எண்ணம்.
   பிரம்ம தேவர் இதை அறிந்து இருவரும் மானுடராய்ப் பிறக்க வேண்டுமெனக் கட்டளையிட்டார்.  அப்படித் தான் வருணன் சந்தனுவாகவும் கங்கை ஒரு பெண்ணாகவும் பூமியை நோக்கி விரைந்தார்கள்.
     அப்படி கங்கை வந்து கொண்டிருந்தபோது அட்டவசுக்களும் துயரத்தோடு கண்கலங்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டாள்.  ஏன் என்று கேட்டாள் கங்கை.
       அவர்கள் வசிட்ட முனிவரின் பசுவை அபகரிக்கத் பிரபாசனின் மனைவி பேச்சைக் கேட்டுத் துணை போனதாகவும் அதனால் இப்படிச் சாபம் வந்ததாகவும் இதில் ஏழு பேர் உடனே தங்கள் பதவியில் மீண்டும் அமர்த்தப்படுவார்கள் எனவும் ஒருவர் மட்டும் சிலகாலம் பூமியில் வாழ வேண்டும் எனவும் கூறினார்கள். பிரபாசன் முதல் குற்றவாளி என்பதால் அவன் மானுடனாக இருக்கும் போது பெண் தொடர்பு இருக்காது என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டதைத் தெரிவித்தார்கள். சரி உங்கள் உய்வுக்கு நான் உதவுகிறேன் என்று உறுதி கூறினாள் கங்கை.
      சந்தனு மன்னன் கங்கைப் பெண்ணைப் பார்த்து வியந்து.  அவளுக்குத் திருமணமாகிவிட்டதா என்று கேட்டு திருமணமாகவில்லை என நிச்சயம் செய்து கொண்டு தன்னை மணக்கச் சம்மதமா என்று கேட்டான்.  அவள் சில நிபந்தனைகளை விதித்தாள்.  வில்லிபுத்தூரார் நிபந்தனையை வாய்மை என்று கூறுவார்.

"சில வாய்மை கூறுவாள்                
 'இரிந்து மெய்ந் நடுங்கிட,
யாது யாது நான்  புரிந்தது, பொறுத்தியேல்,
புணர்வல் உன் புயம்; 
பரிந்து எனை மறுத்தியேல்,
பரிவொடு அன்று உனைப்  பிரிந்து அகன்றிடுவன்,
இப் பிறப்பு மாற்றியே."

"நான் என் விருப்பப்படி நடந்து கொள்வேன்.  என்னை ஏன் என்று கேட்கக் கூடாது.  அப்படியானால் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்.  ஏன் என்று கேட்டால் அடுத்த நிமிடமே நான் நீங்கி விடுவேன்''.

  'எனது உயிர், அரசு, வாழ்வு, என்ப யாவையும் 
    நினது; நின் ஏவலின் நிற்பன் யான்' 

என்றான் சந்தது. சந்தனு உடனே சம்மதித்தான்.  திருமணம் நடந்தது.
      முதல் குழந்தை பிறந்தது.  குழந்தையைக் கொண்டு சென்று கங்கை ஆற்றில் விட்டு விட்டாள் அன்னை.  கண்டு கொள்ளவில்லை.  ஆனால் அடுத்தடுத்து ஏழாவது குழந்தை வரை இப்படியே செய்தாள்.  மக்கள் பொறுப்பார்களா?  தூற்றினார்கள்.  புலம்பினார்கள்.
"மைந்தனைப் பெற்றுக் கங்கையில் எறிதல் கங்கையின் செயல் குறித்து மங்கையர்
 'வழு அறு குருகுல மன்னன் மைந்தர் ஓர்  எழுவரை முருக்கினள், ஈன்ற தாய்!' என,  பழுது அறு மகப் பல பயந்த மங்கையர்  அழுதனர், கண் புனல் ஆறு பாயவே."  
தூற்றினர்
என்கிறார் வில்லிபுத்தூரார்.  எட்டாவது குழந்தையும் பிறந்தது.  இந்தக் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று துடித்தான் சந்தனு மன்னன்.
"தாய் கைப்படாவகை இதம் உறப் பரிவுடன் எடுத்து, மற்று அவள் பதயுகத் தாமரை பணிந்து, பேசுவான்" 
'நிறுத்துக, மரபினை நிலைபெறும்படி!  வெறுத்து எனை முனியினும், வேண்டுமால் இது;  'மறுத்தனன் யான்' என மனம் செயாது, இனிப்  பொறுத்து அருள்புரிக, இப் புதல்வன்தன்னையே!'  
மரபினைக் காப்பாற்ற ஒரு குழந்தை வேண்டும்.  பொறுத்துக் கொள் என்று வேண்டினான்.  இப்போதும் கங்கையை வேண்டுகிறான் அந்த மன்னன்.  பெண் மயக்கம் இன்னும் தீரவில்லை.  சந்தனு மன்னனின் கதையே இது தானே.
    ஆனால் அவள் பொறுத்துக் கொள்ளவில்லை. ஏற்கனவே விதித்த நிபந்தனையின்படி பிறிந்தாள்.
      சிறிது காலம் துயரமடைந்து திரிந்தான் சந்தனு மன்னன்  ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாட சந்தனு மன்னன் சென்ற போது ஒரு இளைஞன் வீரத்துடன் மன்னனை மயக்கமடையச் செய்தான்.  பின்னர் கங்கை நேரில் வந்து மயக்கம் தெளிவித்து இவன் தான் உன் மகன். எல்லா கலைகளையும் கற்றுக் கொடுத்து உள்ளேன்.  வீரத்திலும் விவேகத்திலும் மிகச் சிறந்த பயிற்சி பெற்றவன் இவன்.  இவன் பெயர் தேவவிரதன்.  நீங்கள் கொண்டு போய் வளருங்கள் என்று தேவவிரதனை விட்டுச் சென்றாள்.
    ஒரு நாள் யமுனை நதிக்கரையோரம் நடந்து கொண்டிருந்த போது மணம்மிக்க காற்று வீசியது.  தூரத்தில் ஒரு அழகிய பெண் போய்க் கொண்டிருந்தாள். மீண்டும் மாது மயக்கத்தில் வீழ்ந்தான் சந்தனு. மயங்கினான் மன்னன் அந்த அழகியிடம்.  இம்முறை மரபின் வழக்கப்படி பெண் கேட்டு முறையாக மணம் முடிக்க எண்ணினான்.  எனவே  அந்தப் பெண்ணை நெருங்கினான்.  யார் என்று கேட்டான்.  பதறினாள் அந்தப் பெண்.
      மன்னன் யார் நீ? என்று கேட்டவுடன் "ஒருவன் இப்படியெல்லாம் தனியாக இருக்கும் பெண்ணிடம் பேசக்கூடாது.  எது என்றாலும் என் தந்தையிடம் கேட்டுக் கொள்ளுங்கள்" என்று மறைமுகமாக தன் சம்மதத்தை வழங்கினாள் அந்தப் பெண்.  தன் தந்தையிடம் அழைத்துச் சென்றாள்.  தேர்ப்பாகனை அனுப்பிப் பெண் கேட்கச் சொன்னான் மன்னன் சந்தனு.
     மீனவ வலைஞனின் மகள் அந்தப் பெண்.  பெயரோ சத்தியவதி.  இந்த சத்தியவதி மீனவனின் சொந்த மகளல்ல.
     ஒரு வசு - வானுலக மனிதன் - வானத்தில் செல்லும் போது தன் மனைவியை நினைத்து வெளி வந்த சுக்கிலத்தை ஒரு பறவையிடம் கொடுத்து அனுப்ப அதை இன்னொரு பறவை உணவு என்று கருதி உண்ண வர அது யமுனை நதியில் விழந்து விட்டது.  அங்கு ஒரு மீன் இதை உண்டு இந்த மீன்கன்னி பிறந்தாள்.  உடன் ஒரு ஆண்மகனும் பிறந்தான்.  அதை வலைஞன் தன் தலைவனிடம் கொடுத்தான்.  தலைவன் அந்த ஆண்குழந்தைக்கு மீனவன் என்று பெயரிட்டு வைத்துக் கொண்டான்.  பெண்ணை வலைஞனிடம் திரும்பக் கொடுத்து விட்டான்.  இந்தப் பெண் உண்மையில் வலைஞனின் மகள் அல்ல. அந்தப் பெண் தான் இந்த சத்தியவதி.  இவளுக்கு மீனவவலைஞன் வைத்த பெயர் மச்சகந்தி.  அவள் சத்தியவதி ஆன கதை இதோ.
      மச்சகந்தி தன் இள வயதில் யமுனைக் கரையில் போய்க் கொண்டிருந்த போது பராசரர் என்று ஒரு முனிவர் அங்கு வருகிறார்.  அவருடைய ஞானக் கண்ணில் இந்தப் பெண்ணுக்கு பல பேருக்கு நீதி சொல்லக்கூடிய ஒரு மகன் கிடைக்கும் என்பது புரிகிறது.  அவள் வலைஞனின் குழந்தை.  எப்போது மீன் பிடித்து விற்பது அவர்களுக்குத் தொழில்.  அதனால் உடலோடு மீன் நாற்றம் சேர்ந்தே இருக்கும்.  பராசரர் இந்த நாற்றத்தைப் போக்கி பூமணம் உள்ள பெண்ணாக உன்னை மாற்றுகிறேன்.  ஆனால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும். என்று உண்மையைச் சொன்னார்.
      அவளும் சம்மதிக்க உடன் பிறந்தான் வியாதன்.  திருமாலின் திருஅவதாரம் தான் இந்த வியாதன்.  வடநாட்டவர் இவரை வியாசர் என்று கூறுகிறார்கள்.  வியாசரின் பிறபபு இரகசியம் இது.  இதன்பின் இந்த மச்சகந்தியின் பெயர் சத்தியவதி.
       வலைஞன் என்ன செய்வான்?  வந்திருப்பதோ மன்னன்.  கொடுக்கவில்லை என்றால் அதன் பலனை அனுபவிக்க வேண்டு வரும்.  மறுப்பது நல்லதல்ல.  ஆனால் அவனுக்கு தெரியும் ஏற்கனவே நிபந்தனையை ஒப்புக் கொண்டு கங்கையை மணந்த  மன்னன் சந்தனு இவன் என்று.  நம் பங்குக்கு நாமும் ஒரு நிபந்தனை போட்டுப் பார்ப்போமே"என்று எண்ணினான் அவன்.
       "ஏற்கனவே உங்களுக்கு ஒரு மகன் உள்ளான்.  உங்களுக்குப் பிறகு அவன் தான் அரசன் ஆவான்.  இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் இவளுக்குப் பிறக்கும் மகன் அரசனாக முடியுமா?  முடியும் என்று உத்தரவாதம் கொடுங்கள்.  நான் திருமணத்திற்குச் சம்மதிக்கிறேன்" என்றான்.

.  'பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல மகள் குயம் பொருந்தல், 
மேருவும் அணுவும் நிறுக்குமாறு ஒக்கும்! மேல் இனி இவை புகன்று என்கொல்? 
பார் உவகையினால் ஆளுதற்கு இருந்தான் பகீரதி மகன்; இவள் பயந்த 
சீருடை மகன் மற்று என் செய்வான்? இசைமின், செய்கைதான் திருவுளம் குறித்தே' 

என்கிறது வில்லிபாரதம். பகீரதி மகன் என்றால் கங்கை புத்திரன்.  அவன் தான் தேவவிரதன்.  இந்தத் தடவை மன்னன் சந்தனு அவசரப்படவில்லை.  ஏற்கனவே அவசரப்பட்டதற்கு பலன் அனுபவித்தவராயிற்றே.  எனவே ஒன்றும் சொல்லாமல் திரும்பினார்.

  மன்னர் கவலையோடு இருப்பதை கங்கைமைந்தன் கண்டான்.  தேர்ப்பாகனிடம் விரைந்தார்.  அவனுக்குத் தானே தெரியும்.  தந்தை எங்கே சென்றார்?  ஏன் இந்தக் கவலை என்று.  இன்று கூட பல பணக்காரர்களின் கதை அவர்களுடைய ஓட்டுநர்களுக்குத்தான் தெரியும்.  அருமை மனைவிகளுக்குத் தெரியாது.  தேர்ப்பாகன் நடந்ததை அப்படியே சொன்னான்.  தேவவிரதன் உடனே வலைஞன் இருக்கும் இடத்திற்கு வந்தான்.
    "இனி நீங்கள் தான் எனக்குத் தாத்தா.  உங்கள் பெண் தான் எனக்குத் தாய்.  கங்கைத்தாயை விட அதிகமாக தங்கள் பெண்ணை மதிப்பேன்.  தங்கள் மகளுக்குப் பிறக்கும் குழந்தைக்கே அரியாசனம் தருவேன்.  இது உறுதி" என்று கூறினான். வலைஞர் விடவில்லை.
     "நீ சொல்வாய் அப்பா.  ஆனால் உலகம் ஏற்றுக் கொள்ளாது.  இது நடக்காத செயல்" என்று கூறினான்.   உடனே உலகறிய உரக்க ஒரு சபதம் செய்தான் தேவவிரதன்.  
     "எக்காலத்தும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.  எனவே எனக்குச் சந்ததி கிடையாது.  உங்கள் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கே அரசபதவி.  இது சத்தியம்.  இது சத்தியம். இது சத்தியம்" என்று உறுதியாகச் சொன்னான்.
     இவன் மொழி நயந்து கேட்டுழி, அவையின் இருந்த தொல்  மனிதரே அன்றி,  தவ முனிவரரும், தேவரும், ககனம் தங்கும் மா மங்கையர் பலரும்,  உவகையோடு இவனுக்கு ஏற்ற பேர் உரைசெய்து, ஒளி கெழு  பூமழை பொழிந்தார்-  அவனியில் நிருபர் வெருவரும் திறலான் அரிய சொல் பொருள்  நிலை அறிந்தே 
  என்று கூறுகிறார் வில்லிபுத்தூரார்.
வானத்திலிருந்து தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர்.  வான்வழிக் குரல் =அசரீரி=ஒன்று இவனை வீடுமன் என்று வாழ்த்தியது.  நாம் அன்று முதல் இவனை வீடுமன் என்றே அழைக்கிறோம்.  நடுவில் வடமொழியாளர் வந்து பீஷ்மர் என்று நமக்கு அறிமுகம் செய்து வீடுமன் என்ற இந்த பெயரை நாம் இப்போது மறந்து எது விட்டோம்.
     கதைக்கு வருவோம்.  வலைஞன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான்.  செய்தியை ஓடிவந்து தந்தைக்குச் சொன்னான் வீடுமன்.  புல்லரித்துப் போனார் தந்தை சந்தனு.  அப்போது கூட மகன் இப்படி ஒரு சபதம் செய்திருக்கிறானே என்று வருத்தப்படவில்லை.  ஆனால் மகன் ஆற்றிய செயலை நினைத்து வியந்தார்.  நாம் ஒரு தந்தையாக இவனுக்குச் செய்த செயலை விட - ஒரு மகனாக இவன் எனக்குச் செய்ய வேண்டிய கடமையை மிக அதிகமாகச் செய்து விட்டான்.
     தந்தை உலகில் பெரிய மனிதனாக உலவ கல்வி கேள்விகளில் சிறந்தவனாக ஆக்க வேண்டும்.  மகன் இப்படிப்பட்ட மகவை அடைய இவன் தந்தை என்ன தவம் புரிந்தாரோ என்று எல்லோரும் சொல்லும்படி நடந்து கொள்ள வேண்டும்.  வீடுமன் செய்த செயல் மிக உயர்ந்தது தானே.  எனவே அவர் வீடுமனுக்கு ஒரு வரம் வழங்கினார்.  அப்போது சொல்கிறார் "எங்கள் முன்னோர்களில் ஒருவர் தன் இளமையை தன் தந்தையான யயாதிக்கு வழங்கினான்.  அவனை விட நீ உயர்ந்து விட்டாய் மகனே "   எனவே உனக்கு ஒரு வரம் அளிக்கிறேன் என்றார்.                                  
'முன் தந்தைக்கு உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன்' 

'தந்தையர்க்கு உதவும் உதவியின் எனக்குச் சத மடங்கு உதவினை; உனக்கு 
மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம் செய்திலேன் உதவ; 
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணிச் செல்லும் அன்று அல்லது, உன் உயிர்மேல் 
முந்துறக் காலன் வரப்பெறான்' என்றே முடிவு இலா ஒரு வரம் மொழிந்தான்.

.ஆமாம். உனக்கு எப்போது இறக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது தான் உனக்கு மரணம் ஏற்படும் என்று ஒரு உயர்ந்த வரத்தை வழங்கினார். வேண்டும்போது இறத்தல் 'ஸ்வச்சந்தமரணம்' எனப்படும். .திருமணம் நடைபெற்றது.  மன்னன் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான்.  எல்லை இல்லாத இன்பத்தை நுகர்ந்தான்.
கங்கையின் கரைக் கண்ணுறு காரிகை 
கொங்கை இன்பம் குலைந்தபின், மற்று அவள் 
எங்கை என்ன யமுனையின்பால் வரும் 
மங்கை இன்பம் மகிழ்ந்தனன், மன்னனே. 
      இவர்கள் மகிழ்ந்து நடத்திய இல்லறத்தின் பயனாக இரண்டு மகவுகளை தந்தாள் சத்தியவதி.  அவர்கள் தான் சித்திராங்கதனும் - விசித்திர வீரியனும்.  
      இதில் சந்தனுவிற்குப் பின் சித்திராங்கதன் மன்னன் ஆனான்.  ஆனால் விதி விளையாடியது.  ஒரு கந்தருவன் எனும் வானுலகப் பிறவிக்கு இவன் விபரம் போனது.  என் பெயரை இவன் எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று கொதித்தான் அவன்.  இரவோடு இரவாக வந்து சித்திராங்கதனைக் கொன்றுவிட்டான் அவன்.
    அவனுக்குப் பின் விசித்திரவீரியன் மன்னன் ஆனான். இவனுக்குத் திருமணம் செய்ய வேண்டும்.  இந்த நேரத்தில் தான் காசி மன்னனின் மூன்று மகள்களுக்கு சுயம்வரம் என்று கேள்விப்பட்டார் வீடுமன்.  விசித்திரவீரியனை அழைத்துக் கொண்டு காசி மாநகரம் அடைந்தான்.  எல்லோருக்கும் அதிசயம்.  வீடுமன் திருமணம் முடிக்க மாட்டேன் என்றுசத்தியம் செய்திருக்கிறானே.  இப்போது இங்கு வந்திருக்கிறானே என்று எல்லோரும் வியந்தனர். நியாயமாகப் பார்த்தால் விசித்திரவீரியன் தான் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வரவேண்டும்.

        காசி மன்னனின் மூன்று பெண்களின் பெயர் அம்பை -அம்பிகை - அம்பாலிகை.  சுயம்வரம் நடந்தது.  மூன்று பெண்களும் வயோதிகரான வீடுமனைப் பார்த்து திகைத்து நின்றனர்.  பார்த்தார் வீடுமர்.  மூவரையும் தேரில் ஏற்றிப் பறந்தார் அத்தினாபுரத்திற்கு. எதிர்த்தவர்களை ஓடஓட விரட்டினார். இதில் அம்பை வேறு ஒருவனை விரும்புவதாகக் கூறினாள்.  எனவே அவளை விடுவித்தார்.  அவள் சாலுவன் என்று ஒரு மன்னனை விரும்புவதாகக் கூறினாள்.  அம்பிகை மற்றும் அம்பாலிகையை தம்பி விசித்திரவீரியனுக்கு மணம் முடித்து வைத்தார்.
    தன் விருப்பப்படி போன அம்பையை சாலுவன் ஏற்றுக் கொள்ளவில்லை.  வீடுமனிடம் திரும்பி வந்தாள்.  அவர் உறுதியாக மறுத்தார்.  தந்தை காசி மன்னனிடம் முறையிட்டாள் அம்பை.  அவனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.  தான் எடுத்துள்ள சபதத்தைச் சொல்லிச் சமாதானப்படுத்தினார் வீடுமர்.  எனவே அந்தப் பெண் பரசுராமரைச் சரணடைந்தாள்.
பரசுராமர் பல அரசர்களை வென்றவர்.
"வீர மழுவால் அநேக குல மன்னர் வேரற மலைந்த கோன்,
''இராமனிடம் தோற்று தன் தவப்பலனை இழந்தவர்.  இந்த விடயம் இவளுக்குத் தெரியாது போலும்.  பஞ்சாயத்து செய்ய பரசுராமர் வந்தார்.  அம்பையைத் திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.  ஒத்துக் கொள்ளவில்லை வீடுமர்.  போரிட்டார் பரசுராமர்.
அவ் இராமனும், மறுத்த மன்னவனும், ஐ-இரண்டு தினம், அதாவது பத்து நாட்கள் இகலுடன், வெவ் இராவும் ஒழியாது, வெஞ் சமர் விளைத்த காலை, அடல் வீடுமன் கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து, முன் தளர்வு கண்ட போர் அவ் இராமன் நிகர் என்னுமாறு, இவனை அஞ்சி நின்று, எதிர் அடர்க்கவே, 
தோற்றார் வீடுமனிடம்.  எனவே அம்பை தவம் செய்தாள்.  கடுமையான தவத்தின் பயனாக துருபதன் வேள்வி செய்த போது அவனுக்கு மகனாக சிகண்டி என்ற பெயருடன் உதித்தாள்.
     திருமணம் முடிந்தவுடன் விசித்திரவீரியன் மகிழ்ச்சியாக இல்லறத்தில் திளைத்தான். அளவற்ற இன்பத்தை நுகர்ந்தான்.  அதனால் குட்ட நோய் வந்தது.  கொடுமை செய்தது.  இறந்தான்.
    சத்தியவதிக்குப் பிறந்த மூத்தவன் கந்தர்வனால் கொல்லப்பட்டான்.  இரண்டாவது மகனும் இப்போது இறந்து விட்டான்.  விசித்திர வீரியன் இறந்த பிறகு அந்த மைந்தனுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச்  - தென் புலத்தாருக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்ய வைத்தாள் சத்தியவதி.  சிறிது காலம் துக்கம் கடைப்பிடித்தார்கள்.  பிறகு சத்தியவதி வம்சம் தொடர வழி காண வேண்டும் என சிந்தித்தாள்.  அதன் பலனாக வீடுமனிடம் தேவர நீதிப்படி கொழுந்தியர்க்கு மகவு அளிக்கும்படி கூறினாள். 'ஈண்டு தேவர நீதியின் கொழுந்தியர் எழில் மகப் பெற, நின்னால் வேண்டுமால்; இது, தாயர் சொல் புரிதலின் விரதமும் கெடாது'  என்றாள்.
     தேவரநீதி என்றால் கணவனை இழந்த மகவு பெறதா கைம்பெண் சந்ததி விருத்தியின் பொருட்டு தேவரனோடு (கணவனுடன் பிறந்தவன்) உறவு கொண்டு மகவு பெறலாம் என்று அந்தக் காலத்தில் ஒரு விதிவிலக்கு இருந்திருக்கிறது.  அதுவும் கணவன் இறக்கும் போது குழந்தை இல்லாமல் இருந்தால் தான்.
     ஆனால் வீடுமன் தனது சத்தியத்தை மீறுவதற்குத் தயாராக இல்லை.  சிந்தித்தான்.  ஏற்கனவே பரசுராமரால் சத்திரிய குலம் சந்ததி இல்லாமல் போன போது பல அரச வம்சத்தினர் முனிவர்களைப் பயன்படுத்தி இப்படி சந்ததி விருத்தி செய்தது அவருக்குத் தெரியும்.  அது தான் நியாயம் என்று கருதி தன் கருத்தை தாயிடம் தெரிவித்தார். 
'முனிவரால் மகப் பேறு அடைதலே முறை' என வீடுமன் உரைத்தல்  'மழு எனும் படை இராமனால் மனுகுலம் மடிந்துழி,    அவர் தம்தம்  பழுது இல் மங்கையர் முனிவரர் அருளினால் பயந்தனர் மகவு என்பர்;  எழுது நல் நெறி முறைமையின் விளைப்பதே இயற்கை'   என்று சால்கிறார் வில்லிபுத்தூரார்.

தொடரும்


No comments:

Post a Comment