Sunday 16 September 2012

சுடராழியின் பெருமை



கண்டதும் கழன்றது
கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்
மறுநோய் செறுவான் வலி.
-
பூதத்தாழ்வார் (2248)
(
ஆழி - சக்கரம்)

http://jeevagv.blogspot.in

கண்டேன்! கண்டேன்! கண்ணுக்கினியவன் கண்டேன். அவன் கையிலேந்திய திருச்சக்கரத்தைக் கண்டேன்! 
அச்சக்கரம் எப்படி இருக்கிறது என்பதை மிக அழகாக ஆழ்வார் சொல்வார் - கனலாய், சுடர்மயமாய் பிரகாசித்ததாம். 
நெடுமால் விடும் சுடராழிதனைக் கண்டு ஆழ்வார் சொல்கிறார். வாசனையாய் ஒட்டிக்கொண்டிருக்கும் நோய்களான இருவினைகளையும் - அச்சக்கரத்தைக் கண்டவுடன் தொலைத்தேன் என்கிறார். 

முன்னம் இராமன் சிவதனுசை எடுத்த கணமே அதைக் கண்டவர் அது ஒடிந்ததைக் கேட்டது போலக் கண நேரத்தில் தனது வினைகளும் தொலைந்தது எனக் கூறுகிறார். 

சரி, இரு வினைகள் என்பவை யாவை? நல்வினை, தீவினை எனக் கொண்டால், ஏன் நல்வினையும் அகல வேண்டும்? தீவினை நரகத்தில் தள்ளும். நல்வினை சொர்கத்தில் சேர்க்கும். இரண்டும் இலாமல் பரந்தாமனின் பரமபதமே வேண்டும்.  எனவே தான் நாம் இரட்டைகளிலிருந்து விலக முயல வேண்டும்.  ஆசை-வெறுப்பு, இன்பம்-துன்பம், மகிழ்ச்சி வருத்தம் போன்றவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டும்.  ஏதேனும் ஒன்றில் பற்று வைத்தால் சொர்க்கமோ நரகமோ நிச்சயம்.  நமக்கோ பிறப்புச் சுழலே வேண்டாம் என்கிறோம்.  அப்படியென்றால் இரட்டைகளிலிருந்து விலகியே இருக்க வேண்டும்.

அவ்விரு வினைகளைக் களைந்தாலும் அவை இருந்த இருப்பால் தொடரும் வாசனைகளின் விளைவுகள் முற்றிலுமாய்க் களைய இன்னும் சிலநாள் கழியுமாதலால் - அதனை 'மறுநோய்' என்றார். அதனையும் தொலைத்திட அருளுபவன் எம்பெருமான் எனப் பாடுகிறார் ஆழ்வார்.

No comments:

Post a Comment