Tuesday 11 September 2012

காசியில் கேதாரேசுவரர் தரிசனம்

காசியில் கேதாரேசுவரர் தரிசனம்

காசிக்குச் செல்லும் பலர் அங்குள்ள கேதாரேசுவரர் திருக்கோயிலின் முக்கியத்துவத்தை அறிவதில்லை.    நாம் இன்று கேதாரேசுவரர் திருக்கோயிலின் முக்கியத்துவத்தையும் அதை நமது தமிழ்நாட்டு சைவர் குமரகுருபரர் எவ்வாறு திருக்கோயிலைப் புதுப்பித்தார் என்பதையும் கேட்டு மகிழ்வோம்.

கேதாரேவரரின் முக்கியத்துவத்தைப் பற்றி முருகர் அகத்தியருக்கு உரைப்பதாக கந்த புராணத்தில் உள்ள காசிகாண்டத்தில் எழுபத்தி ஏழாம் அத்தியாயத்தில் உள்ளது.

கேதாரேசுவரர் பற்றிய கதையைக் கேட்ட மாத்திரத்தில் மகா பாபிகளும் தங்கள் பாபங்களிலிருந்து விடுபடுகிறார்கள்.  அவர்களின் முன்வினைப் பாபம் உடனே மறைந்து ஓடுகிறது.

கேதார யாத்திரைக்காக ஒருவர் தனது வீட்டிலிருந்து கிளம்பினாலே அவர்கள் இரண்டு சன்மங்களாக சேர்த்து வைத்த பாபங்கள் உடலிலிருந்து உடனே மறைகின்றன.

பாதி வழி வந்தவருக்கு மூன்று சன்ம பாபம் விலகுகிறது.

ஒருவர் தனது இல்லத்தில் இருந்தவாறே சந்தியா சமயம் கேதாரத்தின் திருப்பெயரை மூன்று முறை கூறினாலும் அவனுக்கு நிச்சயமாகக் கேதாரேசுவரப் பலன் கிடைக்கிறது.

அங்கே உள்ள பிரகாரத்தைப் பார்த்து அங்குள்ள நீரைப் பருகுபவர்கள் ஏழு சன்மமாகச் செய்த பாபம் நீங்குகிறது.

அரபாப குண்டத்தில் திருக்குளியல், கேதாரேசுவரரைப் பூசித்தல் ஆகியவை கோடிக்கணக்கான சன்மங்களின் பாபங்களை விலக்குகின்றன.  ஒரு தடவை அரபாப குண்டத்தில் குளித்து இதயத்தில் கேதாரேசுவரரை நினைத்தால் இறுதிக்காலத்தில் உறுதியாக முக்தியை அடைகிறான்.

அரபாப குண்டத்தில் சிரத்தையுடன் குளிப்பவன் ஏழு தலைமுறை முன்னோர்களை கரையேற்றுகிறார்கள்.

முன்னொரு காலத்தில் வசிட்டர் என்னும் அந்தணச் சிறுவன் சிவபெருமானிடம் மிக பக்தியுடன் இருந்தான்.  அவன் உச்சயினி சென்று கர்பர் என்னும் ஆசிரியரிடன் சீடனாகச் சேர்ந்தான்.  சிவலிங்கத்திற்கும் குருவிற்கும் வித்தியாசம் தெரியாது அவனுக்கு.  இருவரின் மீதும் அவ்வளவு பற்றுதல் அந்த அந்தணச் சிறுவனுக்கு.

ஒரு தடவை அச்சிறுவன் தனது குருநாதருடன் இமயமலையில் உள்ள கேதாரத் திருத்தலத்திற்குச் சென்றான்.  செல்லும் வழியிலேயே குருநாதர் இறந்து விட்டார்.  அப்போது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிவபெருமானின் அணுக்கத் தொண்டர்கள் வந்து அவரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு கைலாசத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

கேதாரேசுவரரைத் தரிசிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் ஒருவன் யாத்திரையாக காசிக்கு வரும்பொழுது பாதி வழியில் மரணம் அடைந்தால் அனேக நாட்கள் வரை அவன் கைலாசத்தில் வசிக்கிறான்.

இதைக் கண்ட சீடன் கேதாரேசுவரர் தான் மற்ற இலிங்கங்களை விட உயர்ந்தவர் என மனதில் உறுதியுடன் நம்பினான்.  எனவே ஒவ்வொரு ஆண்டும் கேதாரேசுவரரை தரிசிப்பது என உறுதி எடுத்துக் கொண்டான்.  இவ்வாறாக 61 முறை யாததிரை சென்றான்.  வயோதிகப் பருவம் வந்து விட்டது.  மற்ற சாதுக்கள் இமயமலைக்கு யாத்திரை செய்ய வேண்டாம் என இவரிடம் வேண்டினார்கள்.  வழியில் இறந்தால் என் குருநாதரைப் போல் எனக்கும் முக்தி கிடைக்கும் என பதில் கூறினான் அந்த சீடன்.

இதைப் பார்த்த சிவபெருமான் மகிழ்ச்சி அடைந்தார்.  அவன் கனவில் சிவபெருமான் தோன்றி வரங்களைக் கேட்கும்படி அருளினார்.  அப்போது வயதான அந்த முனிவர் கனவில் கண்டது பலிக்காதே என்று கருதினார்.  ஆனால் சிவபெருமான் பக்தர்களின் கனவு பலிக்கும் என உறுதி கூறி வரங்களைக் கேட்கும்படி வற்புறுத்தினார்.

அவன் தனக்காக வரம் எதுவும் கேட்காமல் தனக்கும் தன் கூட உள்ள அனைவருக்கும் அனுக்கிரகம் செய்யும்படி வேண்டினான்.  இதனால் மகிழ்ந்தார் சிவபெருமான்.  மற்றொரு வரம் தரச் சித்தமானார்.  அப்போது அந்த முனிவர் இமயமலையிலிருந்து வந்து காசியில் நிரந்தரமாகத் தங்க வேண்டுமென்று வரம் கேட்டான்.

எனவே இமயமலையில் ஒரு கலையை மாத்திரம் விட்டுவிட்டு பாக்கியுள்ள கலைகளுடன் காசியில் உள்ள கேதாரேசுவரர் திருக்கோவிலிலேயே தங்கிவிட்டார் சிவபெருமான்.

இமய மலையில் உள்ள கேதாரேசுவரரைத் தரிசித்தால் என்ன பலன் கிடைக்குமோ அதைவிட ஏழு பங்கு பலன் காசியில் கேதாரேசுவரைத் தரிசித்தால் கிடைக்கும் என உறுதியும் வழங்கினார் சிவபெருமான்.

முன்பெல்லாம் அரபாப தீர்த்தம் ஏழு சன்மங்களில் செய்த பாபத்தையே போக்கடித்தது.  ஆனால் கங்கை வந்தபிறகு கோடிக்கணக்கான சன்மங்களில் செய்த பாபங்கள் நாசமடைகின்றன.

உதாரணமாக அங்கு ஒருதடவை இரு காகங்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு இறந்து கங்கையில் விழுந்தன.  அவை உடனே முக்தியடைந்து அம்ச பட்சிகளாக மாறிப் பறந்து கைலாசத்திற்குச் சென்றன.

இந்த அரபாப தீர்த்தத்தில் முதன் முதலில் குளித்த பெருமை பார்வதி அன்னையையே சாரும். அதனால் தான் பின்னர் இது கௌரிகுண்டம் எனப் பெயர் பெற்றது.  இந்த இடத்தில் கங்கை நதியே மதுதாரை என்ற பெயருடன் விளங்குகிறாள்.

இப்படிப்பட்ட கேதாரேசுவரர் திருக்கோவிலுக்கு அருகில் கேதார தீர்த்தத்தில் குளித்து ஒருவன் நல்ல உள்ளத்துடன் சிரத்தையுடன் பிண்டதானம் செய்தால் அவனுடைய நூற்றிஒரு தலைமுறை சேர்ந்த முன்னோர்கள் சம்சார சாகரத்தில் இருந்து கரையேறுகிறார்கள்.

செவ்வாய்க் கிழமையன்று அமாவாசை வந்தால் அன்று  கேதார குண்டத்தில் சிரார்த்தம் செய்வானேயானால் கயா சிரார்த்தத்தினால் ஒரு பிரயோசனமும் இல்லை.

ஒருவன் காசியில் சித்திரை மாதத்தில் விரதம் இருந்து மூன்று கைப்பிடி அளவு கங்கை நீரைப் பருகினால் அவன் இதயக் கமலத்தில் கேதாரேசுவரர் வாசம் செய்வார்.

இவ்விடத்தில் ஆடை, உணவு, பணம் கொடுத்து கேதாரேசுவர பக்தர்களைப் பூசை செய்தாலும் தன்னுடைய பிறவிப் பாபத்திலிருந்து விடுபடுகிறான்.

ஆறு மாத காலம் காசியில் தங்கி அனுதினம் கேதாரேசுவரரை உளம் உருக தியானித்து வணங்கினால் அவர்களை எமராசனும் அஷ்டதிக் பாலகர்களும் எப்போதும் வணங்குவார்கள்.

கேதாரேசுவரருக்கு வடக்கு பாகத்தில் சித்ராங்கதேசுவர இலிங்கம் உள்ளது.  அதைத் தொழுதால் சொர்க்கத்தின் நித்ய போகத்தை அனுபவிக்கலாம்.

கேதாரேசுவரருக்குத் தென்பாகத்தில் நீலகண்டேசுவரர் உள்ளார்.  அவரைத் தரிசனம் செய்தால் சம்சார பயம் கிடையாது.  வாயு கோணத்தில் உள்ள அம்பரீசுவரரைத் தரிசனம் செய்தால் இனி கர்ப்ப வாச துன்பமே கிடையாது.  இப்படியாக கேதாரேசுவரரைச் சுற்றியுள்ள அத்தனை இலிங்கங்களும் மிக அதிகமான பலன்களைத் தருகின்றன.  

எனவே காசிக்குச் செல்லும் அன்பர்கள் அவசியம் கேதாரேசுவரரைத் தொழவேண்டும் என வேண்டுகிறேன்.

சரி = இனி தமிழ்நாட்டுக்கும் இந்த கேதாரேசுவரருக்கும் என்ன சம்பந்தம் என்பதை நாம் அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.  அது தமிழர்களுக்குப் பெருமையளிக்கும் ஒரு சரித்திரச் சம்பவம்.

அடுத்த பதிவில் அதைத் தெரிவிக்கிறேன்.






No comments:

Post a Comment