Tuesday 11 September 2012

கங்கையும் நர்மதையும் சமம்

கங்கையும் நர்மதையும் சமம்


கங்கையும் நர்மதையும் சமமா= எப்படி என்ற கேள்வி வருகிறது அல்லவா.  அதற்கான பதில் காசி காண்டத்தின் தொண்ணூற்று இரண்டாம் அத்யாயத்தில் உள்ளது.  கந்தபுராணத்தில் உள்ளது காசி காண்டம்.  அகத்திய முனிவருக்கு கந்தன் காசியின் பெருமையைக் கூறுவதாக அமைந்துள்ளதே காசி காண்டம் ஆகும்.
சரி கதைக்கு வருவோம்.
வராக கல்பம் துவங்கும் நேரம் முனிவர்கள் எல்லாம் ஒன்றுகூடி மார்கண்டேய முனிவரைப் பார்க்க வந்தார்கள்.  மார்கண்டேயரைப் பார்த்து, “மிருகண்டு நந்தனா = நதிகளில் எந்த நதி மிகவும் புண்ணியமானது” என்று கேட்டார்கள்.
மார்கண்டேயர் கூறுவார் = “நதிகளில் பல பாபத்தைப் போக்கடிக்கக் கூடியவையே.  அவைகளில் சிறந்தவை கடலை அடையக் கூடிய நதிகள்.  அவைகளில் உத்தமமானவை கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை ஆகும்.
கங்கை ரிக் வேதத்தின் சின்னம்.
யமுனை யசூர் வேதத்தின் சின்னம்
நர்மதை சாம வேதத்தின் சின்னம்
கங்கையோ பெருவெள்ளத்தால் ஆதி கடலையே நிரப்பும் வல்லமை படைத்தவள்.  அதனால் கங்கைக்குச் சமமாக யாரையும் கூறமுடியாது.  ஆனால் நர்மதை கங்கைக்குச் சமமாக தானும் இருக்க வேண்டும் என்று கருதினாள்.
எனவே கடுமையான தவத்தில் ஈடுபட்டாள்.  பிரும்மா மனம் உருகினார்.  நர்மதை முன் வந்து நின்று ‘வேண்டும் வரத்தைக் கேள்’ என்றார்.
கங்கைக்குச் சமமான பட்டம் தனக்கு வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள் நர்மதை.  பிரும்மா தனது கருத்தைச் சொன்னார்.
“மகாதேவருக்கு சமமான தெய்வம் இல்லை.
மகாவிட்டுணுவிற்கு சமமான புருஷன் ஒருவரும் இல்லை.
கௌரிக்குச் சமமான பெண் தெய்வம் இல்லை
காசிக்குச் சமமான ஒரு நகரம் இல்லை”
எனவே கங்கைக்குச் சமமாக ஆகமுடியாது என்று உறுதியாகச் சொன்னார் பிரும்மா.
நர்மதையின் மனம் இக்கருத்தை ஏற்கவில்லை.  எனவே பிரும்மாவின் கருத்தைப் புறக்கணித்தாள் நர்மதை.
காசி மாநகரில் திரிலோசனருக்கு மிக அருகில் ஒரு இலிங்கத்தை நியமப்படி தாபித்தாள்.  சிறப்பான பூசைகள் செய்தாள்.  சிவபெருமான் மனம் மகிழ்ந்தார்.  உடனே வரம்தர பூலோகம் வந்து நர்மதை முன் நின்றார்.
‘குற்றமற்றவளே என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார் சிவபெருமான்.
நர்மதை “தங்கள் இணையடிகளில் இடையூறில்லாத பக்தியே எனக்கு வேண்டும்” என்று கூறினாள்.  வழங்கினார் சிவபெருமான்.
மனம் மகிழ்ந்த சிவபெருமான தானாகவே ஒரு வரத்தைக்  கொடுத்தார்.
“ உனது கரையில் உள்ள கற்கள் எல்லாம் சிவலிங்கங்கள் ஆகட்டும்” என்றார்.
சிவபெருமான் மற்றொரு வரத்தையும் தர விரும்பினார்.  எனவே மற்றொரு வரத்தையும் கொடுத்தார்,.
“நர்மதையே,  கங்கை தன்னிடம் குளிக்கும் பக்தர்களின் பாபத்தைப் போக்குகிறாள்.  யமுனையோ ஒரு வாரம் குளித்தால் பக்தர்களின் பாபத்தைப் போக்குவாள்.  மூன்று நாள்கள் குளித்தால் தான் சரசுவதி பாபங்களைப் போக்குவாள்.  ஆனால் இன்று முதல் உன்னைப் பார்த்த உடனேயே உன் பக்தர்களின் பாபங்கள் நீங்கிவிடும்.  தரிசனத்தாலேயே பாபத்தைப் போக்கும் நர்மதையே  நீ தாபித்த இலிங்கம் இனி நர்மதேசுவரர் என வழங்கப்படும்.  இந்த இலிங்கம் தொழும் பக்தர்களுக்கு முக்தியை அளிக்கும்  இந்த இலிங்கமும் பார்த்த உடனேயே முக்தியை அளிக்கும் பெருமையை அடைகிறது.
இப்படித்தான் நர்மதை கங்கைச் சமமான மதிப்பை ஏன் ஒரு படி மேலெ போய் தரிசித்தாலேயே பாபத்தைப் போக்கும் வல்லமையைப் பெற்றார் என மார்கண்டேயர் நர்மதையின் சரித்திரத்தைக் கூறினார்.
இக்கதையைக் கேட்டாலேயே பக்தர்கள் பாபப் போர்வைகளைக் களைந்து உத்தம ஞானத்தை அடைவார்கள் என்பது பலன்.

இவ்வளவு பெருமை பெற்ற திருக்கோவில் திருலோசனர் கோவிலுக்கு மிக அருகாமையில் உள்ளது.  அதன் முகவரி ஏ2/79 திருலோசனருக்குப் பின்னால் என்று கூறினால் தெரிந்து விடும்.  பிரகலாதா காட் என்னும் படித்துறை வழியாகவும் செல்லலாம்.

அந்த இலிங்கத்தின் படம் வாரணாசி கோவில்கள் என்ற வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கு மிக்க நன்றி.  ஆங்கிலம் தெரிந்தவர்கள் அந்த வலைத்தளத்தைப் பார்த்து வாரணாசி பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.


அன்பர்களே நர்மதேசுவரரைத் தரிசித்தீர்களா = மிக்க நன்றி.

காசி யாத்திரையை நாம் நாளை தொடர்வோம்.

No comments:

Post a Comment